சென்னையில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அப்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மற்றும் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த தோல்வி குறித்துத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். “இந்தத் தேர்தலில் திமுக தோற்றிருந்தாலும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோற்றிருக்கக்கூடாது; நிலா தேயலாம், ஆனால் வானம் தேய்ந்துவிடக் கூடாது” என்று குறிப்பிட்ட அவர், கொளத்தூர் தொகுதியைத் தமிழ்நாட்டின் ஒரு தொகுதி என்பதைத் தாண்டி சிங்கப்பூரின் ஒரு பகுதி என்று கேட்கும் அளவுக்கு உயர்த்தியவர் மு.க.ஸ்டாலின் எனப் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தத் தோல்விக்காக யாரையும் குறை சொல்லாமல், “தோல்வியின் முழு பொறுப்பையும் நான் ஒருவன் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது தனது இதயத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியதாக வைரமுத்து தெரிவித்தார். ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் தமிழர்களின் நன்றி உணர்வின் மீதே சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்ட அவர், “மே 4-ஆம் தேதி ஒரு நாள் மட்டும்தான் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் கொளத்தூர் தொகுதி மக்கள் 365 நாட்களும் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; நான் ஸ்டாலினுக்கு வருந்துவதை விட அந்தத் தொகுதி மக்களுக்காகவே அதிகம் வருந்துகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இதற்கிடையே, இந்த விழாவில் பங்கேற்றுப் பேசியது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்திலும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தோல்வியில் வழி காண்கிறவன் மேதை; பழி போடுகிறவன் கோழை. இயக்கங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் தோல்வி என்பது ஆசான். தோல்வி என்பது சோர்வதற்கல்ல; ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல. தோல்வியைத் தூர நிறுத்திவிட்டு மக்களைப் பக்கத்தில் அழைத்துக்கொள்வார் கலைஞர்; அதையே பின்பற்றுங்கள். வெற்றி என்பது பெற்றுக்கொள்ள, தோல்வி என்பது கற்றுக்கொள்ள” என்று தத்துவார்த்தமாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
