இங்கிலாந்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த குழந்தைகள் பாலியல் சுரண்டல் கும்பல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் விவகாரம், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் ஆற்றிய உரையின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் அவர் வாசித்துக் காட்டிய, இந்தத் துயரத்திலிருந்து உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் பாலியல் சுரண்டல், கடத்தல், பாலியல் மிரட்டல் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் அலட்சியம் ஆகியவற்றை விவரிக்கும் விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள சாட்சியங்கள் மனிதநேயற்ற கொடூரங்களை வெளிப்படுத்துகின்றன. அதில் ஒரு பெண், தனது 13 வயதில் தொடங்கிய துன்புறுத்தலின் காரணமாக, மூன்றே ஆண்டுகளில் 600 முதல் 700 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பெண், கொடூரமான தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்குப் பாதிக்கப்பட்டதாகவும், வாகனத்தின் பின்புறத்தில் 15 முதல் 20 சிறுமிகள் நாய்க் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த கொடூரத்தைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் தங்களைப் பற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகத் தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் தலைமையில் நடத்தப்பட்ட தனியார் விசாரணையில், இங்கிலாந்தின் குறைந்தது 85 பகுதிகளில் இத்தகைய குழு அடிப்படையிலான குழந்தை பாலியல் சுரண்டல் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையில், சில பகுதிகளில் குறிப்பிட்ட சில வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் இக்குற்றச்சாட்டுகளில் அதிகளவில் தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், காவல்துறை மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளின் அலட்சியப் போக்கும், அரசியல் ரீதியான தயக்கங்களுமே இத்தகைய கொடூரமான குற்றங்கள் நீண்டகாலம் தடையின்றித் தொடர முக்கியக் காரணமாக அமைந்தன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இங்கிலாந்தில் இத்தகைய விவகாரம் முதன்முதலில் 2014-ஆம் ஆண்டு ரோதர்ஹாம் நகரில் நடந்த விசாரணையின் போதுதான் அதிகாரப்பூர்வமாகப் பெரும் கவனத்தைப் பெற்றது. அங்கு மட்டும் 1997 முதல் 2013 வரை சுமார் 1,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரோக்டேல், ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பல நகரங்களிலும் இதே போன்ற நெஞ்சை உலுக்கும் குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டன. தற்போது இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிரொலித்துள்ளதை அடுத்து, இங்கிலாந்து அரசு தேசிய அளவிலான விசாரணையைத் தீவிரப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள குறைபாடுகளைக் களையவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
