ஆயிரம் ரூபாய்க்கு வேலை.. நூறு ரூபாய்க்கு வேட்டியா..? “பிளாஸ்டிக் வாளி” அரசியல் செய்யும் மாஜி அமைச்சர்… சொந்தக் கட்சி நிர்வாகிகளே கிண்டல்..!!

By Soundarya on மாசி 18, 2026

Spread the love

திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமார் வாரத்திற்கு இரண்டு முறை டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயிலில் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டங்களுக்குத் தொண்டர்களை அழைத்து வர மாவட்டத்தின் தொலைதூரப் பகுதிகளான உசிலம்பட்டி, சோழவந்தான் போன்ற இடங்களிலிருந்து வாடகை வாகனங்களைச் சொந்த செலவில் ஏற்பாடு செய்யுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காகப் பல ஆயிரம் ரூபாய்களை நிர்வாகிகள் செலவழிக்கும் நிலையில், கூட்டம் முடிந்து போகும்போது முன்னாள் அமைச்சர் வெறும் வேட்டி, சேலைகளை மட்டும் கொடுத்து அனுப்பி வைப்பது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆயிரம் ரூபாய் வேலை வாங்கிவிட்டு நூறு ரூபாய் அன்பளிப்பு வழங்குகிறார்” என நிர்வாகிகள் புலம்பி வரும் நிலையில், தொகுதிப் பக்கங்களில் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்குப் பிளாஸ்டிக் வாளிகளை விநியோகித்து வருகிறார். உலகம் நவீன தொழில்நுட்பங்களை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், முன்னாள் அமைச்சர் இன்னும் ‘பிளாஸ்டிக் வாளி’ அரசியலிலேயே நின்று கொண்டிருப்பதாகச் சொந்தக் கட்சி நிர்வாகிகளே கிண்டல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படியே போனால் தேர்தல் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தங்களது நிலைமை மோசமாகிவிடும் என்று கட்சிப் பொறுப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.