தமிழகத்தில் புதிய முதலமைச்சராக நடிகர் விஜய் பதவியேற்ற சில நாட்களிலேயே, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற ஆர்வலரான லிசிப்ரியா கங்குஜம் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்திருந்தார். அரசு அலுவலகங்களில் விஐபி நாற்காலிகளின் பின்புறம் வெள்ளை துண்டு போடும் காலனிய ஆதிக்கக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அதற்கு முதல்வராக விஜய் ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள், முதலமைச்சர் அலுவலகத்தில் (CMO) இருந்து வெளியான ஒரு புகைப்படத்தில் முதல்வரின் நாற்காலியிலிருந்து வெள்ளை துண்டு அகற்றப்பட்டிருந்தது. எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல், அமைதியான முறையில் இந்த ‘விஐபி கலாச்சாரம்’ ஒழிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இதனைப் பெரிதும் கொண்டாடியதுடன், “மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் முதல்வர்” என லிசிப்ரியாவும் விஜய்க்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
ஆனால், இந்த விவகாரம் அடங்குவதற்குள் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஒரு புதிய புகைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அரசு உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது முதலமைச்சர் விஜய் நின்று கொண்டு மலர்க்கொத்து மற்றும் புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார்; ஆனால், அங்கிருந்த அவரது பிரதான நாற்காலியின் பின்புறம் வழக்கம் போல அந்த ‘வெள்ளை துண்டு’ அப்படியே விரித்து வைக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை துண்டு நீக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சில நாட்களிலேயே, மீண்டும் அதே துண்டு நாற்காலியை அலங்கரிப்பதைக் கண்ட சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் இது தவெக அரசின் வெறும் ‘கண் துடைப்பு’ (Eye Wash) அரசியல் என்று விமர்சித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நல்ல பெயரைப் பெறுவதற்காகவும், சமூக வலைத்தளங்களில் விளம்பர உத்திக்காகவும் மட்டுமே துண்டை அகற்றியது போல் காட்டியுள்ளார்களா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாற்காலியில் துண்டு போடுவது என்பது வெறும் துணி சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, அது அதிகாரத்துவத்தின் குறியீடு என்று சுட்டிக்காட்டும் பொதுமக்கள், ஒரு சில புகைப்படங்களுக்காக மட்டும் துண்டை மறைத்துவிட்டு நிஜத்தில் பழைய விஐபி கலாச்சாரத்தையே அரசு நிர்வாகம் தொடர்வது அம்பலமாகியுள்ளதாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்போது ட்விட்டர் (X) மற்றும் முகநூல் பக்கங்களில், “அன்று துண்டை எடுத்தது வெறும் போட்டோஷூட் தானா?”, “கைதட்டல் வாங்குவதற்காக ஒரு நாள் மட்டும் துண்டை எடுத்துவிட்டு, அடுத்த நாளே மீண்டும் பழையபடி நாற்காலியில் போட்டுவிட்டார்களே” என்று விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறி ஆட்சியைப் பிடித்த விஜய், நிர்வாக நடைமுறைகளிலும், விஐபி கலாச்சார ஒழிப்பிலும் உண்மையிலேயே உறுதியாக இருக்கிறாரா அல்லது இவை அனைத்தும் தற்காலிக விளம்பரப் பிரசாரங்களா என்பதை அவரது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தான் தெளிவுபடுத்த வேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
