அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், உலக வர்த்தகத்தின் மிக முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் இருநாடுகளுக்கும் இடையே கடும் முட்டுக்கட்டை நிலை நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இருதரப்புப் போர், நேரடித் தாக்குதல்கள் ஓய்ந்த பின்பும் இன்னும் முழுமையான முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக, ஈரானின் அதிகாரப்பூர்வ அனுமதி மற்றும் சுங்கக் கட்டணம் இன்றி இப்பாதையில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் விடுத்த மிரட்டலால் அங்கு பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், ஈரானின் அச்சுறுத்தலால் அங்குச் சிக்கித் தவிக்கும் வணிகக் கப்பல்களை மீட்க அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் களமிறங்கியுள்ளன. கடந்த மூன்று வாரங்களில் மட்டும், குறைந்தது 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க அமெரிக்க கடற்படை உதவியுள்ளது. ஈரானின் ரேடார்களில் சிக்காமல் இருப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தின் வழிகாட்டுதலைப் பெறும் இந்தக் கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தைக் காட்டும் டிரான்ஸ்பாண்டர் (Transponder) கருவிகளை முற்றிலும் அணைத்துவிட்டுப் பயணிக்கின்றன. இத்தகைய ஆபத்தான பயண முறை ‘டார்க் பேஸேஜ்’ (Dark Passage) என்று அழைக்கப்படுகிறது.
வணிகக் கப்பல்களின் பாதுகாப்பைக் கருதி, அவை பயணிக்கும் துல்லியமான பாதையை அமெரிக்கா பொதுவெளியில் வெளியிடவில்லை. இருப்பினும், அமெரிக்கா காட்டும் இந்த மாற்றுப் பாதையானது ஈரானின் கடற்கரை எல்லைக்கு மிக அருகில் இல்லாமல், சர்வதேச விதிகளின்படி பாதுகாப்பான தூரத்தில் இருப்பதாக அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின் கடுமையான முடக்கத்திற்கு மத்தியிலும் அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக வர்த்தகக் கப்பல்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
