தெற்கு சீனாவைத் தாக்கிய ‘மேசாக்’ புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த கனமழை, அந்நாட்டு மக்களைப் பெரு வெள்ளத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், தற்போது ஒரு புதிய உயிர்மிரட்டலையும் ஏற்படுத்தியுள்ளது. குவாங்ஸி ஷுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஹெங்ஷோ நகரில் செயல்பட்டு வந்த ஒரு பெரிய பாம்புப் பண்ணை வெள்ள நீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதனால் அங்கிருந்த கூண்டுகள் உடைந்து, பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கொடிய விஷமுள்ள பாம்புகள் அனைத்தும் தப்பித்து ஊருக்குள் புகுந்துள்ளன.
பண்ணையிலிருந்து ஒன்றல்ல, இரண்டல்ல… சுமார் 800 முதல் 900 பாம்புகள் வரை தப்பி ஓடியுள்ளதாக உள்ளூர் அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இதில் ராஜநாகம் , நல்ல பாம்பு , மற்றும் விரியன் போன்ற மனித உயிர்களுக்கு உடனடியாக ஆபத்தை விளைவிக்கக்கூடிய மிகக் கொடிய விஷப் பாம்புகளும் அடங்கும். இந்த பாம்புகள் அனைத்தும் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளதால், ஒட்டுமொத்த ஹெங்ஷோ நகர மக்களும் தற்போது கடுமையான பீதியில் உறைந்து போயுள்ளனர்.
https://www.instagram.com/reel/DafNZ-EBmqw/?utm_source=ig_web_button_share_sheet
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், இந்த நிலமையின் தீவிரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நகரத்தை ஒட்டியுள்ள வயல்வெளிகள் மற்றும் சாலையோர வெள்ள நீரில் விஷப் பாம்புகள் கூட்டமாக நீந்திச் செல்வதை மக்கள் தங்களின் மொபைல் போன்களில் படம்பிடித்துள்ளனர். இந்த பயமுறுத்தும் காட்சிகளைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து வரும் வேளையில், உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புப் படையினர் பெரிய வலைகளைப் பயன்படுத்தி வெள்ள நீரிலிருந்து பாம்புகளைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக லியுலான் மற்றும் யுன்பியாவோ ஆகிய நீர்த்தேக்கங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதன் விளைவாக, அப்பகுதியில் இருந்த பல சிறிய பாம்புப் பண்ணைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, ஊருக்குள் புகுந்த பாம்புகளில் ஒன்று ஏற்கனவே ஒருவரைத் தீண்டியுள்ளதாகவும், அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, சீன அதிகாரிகள் சிறப்பு அவசரக் குழுக்களைப் போர்க்கால அடிப்படையில் களமிறக்கியுள்ளனர். வெள்ள நீரில் இன்னும் நூற்றுக்கணக்கான பாம்புகள் மறைந்திருக்க வாய்ப்புள்ளதால், மீட்புப் பணிகள் முழுமையாக முடியும் வரை பொதுமக்கள் யாரும் வெள்ளம் பாதித்த தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். புயல் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள், இந்த ‘பாம்புப் படை’யின் ஊடுருவல் சீன மக்களை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது.
