சண்டிகரில் நள்ளிரவில் ஆன்லைன் மூலம் டாக்ஸி முன்பதிவு செய்த இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 27-ஆம் தேதி இரவு, செக்டார் 28-இல் உள்ள அந்தப் பெண் ‘இன்ட்ரைவ்’ (InDrive) செயலி மூலம் டாக்ஸி முன்பதிவு செய்தபோது, ஓட்டுநரின் விவரங்கள் அனைத்தும் சரியாகவே தோன்றியுள்ளன. ஆனால், பயணத் தொடக்கத்திற்கு முன்பே அந்த ஓட்டுநர் அநாகரிகமான செய்திகளை அனுப்பியதுடன், பாலியல் ரீதியான சலுகைகளை அளித்தால் இலவச சவாரி தருவதாகக் கூறி அதிர்ச்சியளித்துள்ளார். அதாவது அவர், “நீ என்னுடன் உடலுறவு கொண்டால், நான் உனக்கு இலவச சவாரி தருகிறேன், நீ என்ன கேட்டாலும் பணம் தருகிறேன்” என்றுள்ளார். அந்தப் பெண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ஓட்டுநர் அவரை மிரட்டும் வகையில் பேசியதுடன், “காவல் நிலையத்திற்கே வந்தாலும் நான் அஞ்சமாட்டேன்” என்று சவால் விடுத்துள்ளார்.
“நீ என்னுடன் உல்லாசமாக இருந்தால்” சவாரி இலவசம்… நள்ளிரவில் டாக்சி புக் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… அடுத்து நடந்த சம்பவத்தால் மன்னிப்பு கேட்ட டிரைவர்..!!
மறுநாள் இது குறித்து ஆதாரங்களுடன் அந்தப் பெண் செக்டார் 26 காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அங்கு காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் அந்தப் பெண்ணிற்கு மேலும் வருத்தத்தை அளித்துள்ளது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுத்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதற்குப் பதிலாக, ஓட்டுநரை அழைத்து அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்கச் செய்து வழக்கை முடிக்க முயன்றுள்ளனர். ஓட்டுநர் அது ‘தவறுதலாக அனுப்பப்பட்ட செய்தி’ எனக் கூறி தப்பிக்க முயன்றது, பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இத்தகைய மெத்தனமான போக்கு குற்றவாளிகளுக்குத் துணிச்சலை அளிக்கும் என்பதால், இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
