முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) ஆட்சியைத் திரைமறைவில் சதித்திட்டம் தீட்டி கவிழ்க்க முயன்றதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் என்.இளையராஜாவை, அரசியல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்துவதாகக் கூறிக்கொண்ட திருநாவுக்கரசு என்பவர் மொபைல் போனில் தொடர்புகொண்டுள்ளார். சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தின்போது தங்களுக்கு சாதகமாகச் செயல்பட ரூ.35 கோடி வரை சன்மானம் தருவதாக ஆசைவார்த்தை காட்டியதுடன், மறுத்தால் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என மிரட்டலும் விடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ. இளையராஜா, இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணையில் இறங்கிய திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார், முதற்கட்டமாக தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவன தலைவர் திருநாவுக்கரசு, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் உட்பட 8 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் கவிழ்க்க ரூ.180 கோடியில் பிரம்மாண்ட சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறி அதிர வைத்துள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கூறியதன் பேரில்தான் இந்த குதிரை பேரத்தை நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசுவின் கார் டிரைவரான மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரையும் ஒன்பதாவது நபராக போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது கைது நடவடிக்கைக்கு பயந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கரூரில் உள்ள அவர்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்ற தனிப்படை போலீசார், இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வராத நிலையில், அவர்கள் இன்று போலீஸ் விசாரணையில் ஆஜராவார்களா அல்லது காவல்துறை அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
