நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது. சவாரி முடிந்து பயணி ஒருவர் ஆட்டோ கட்டணத்துடன் தவறுதலாக 50 ரூபாய் கூடுதலாகக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பணத்தை எண்ணிப் பார்த்தபோது தனக்கு உழைக்காமல் கிடைத்த கூடுதல் பணம் இது என்பதை உணர்ந்த ராஜு பாபா, அதைத் தன் சொந்தத் தேவைக்கு வைக்காமல், தேவையுள்ள மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடிவெடுத்தார்.
அவர் தனது ஆட்டோவில் செல்லும்போது, சாலையில் நடந்து சென்ற ஒரு முதிய பெண்ணைப் பார்த்து வண்டியை நிறுத்தி, அவரிடம் கட்டணம் ஏதும் வாங்காமல் இலவசமாக அவரது இலக்கில் கொண்டு போய் சேர்த்துள்ளார். அதோடு நில்லாமல், தன்னிடம் இருந்த பணத்தில் இருந்து 10 ரூபாயையும் அவரிடம் கொடுத்துள்ளார். அந்தப் பெண் முதலில் தயங்கியபோதும், தனக்குக் கிடைத்த கூடுதல் பணத்தின் ஒரு பகுதி இது என்று கூறி மகிழ்ச்சியோடு கொடுக்க, அவரும் ஆசிர்வதித்து வாங்கிக் கொண்டார். தொடர்ந்து, கடும் வெயிலில் நடந்து சென்ற மற்றொரு முதியவருக்குத் குடிநீர் பாட்டிலும், 10 ரூபாயும் கொடுத்து உதவி செய்துள்ளார்.
https://www.instagram.com/reel/DZz6o27oAlT/?utm_source=ig_web_button_share_sheet
தன்னிடம் இருந்த 50 ரூபாயில் 20 ரூபாயை இவ்வாறு செலவிட்ட அவர், மீதமுள்ள 30 ரூபாயையும் அடுத்தடுத்து தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்கப் போவதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த மனிதநேயப் பண்பு சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. “உண்மையான செல்வம் என்பது வங்கிச் சேமிப்பில் இல்லை, மனிதர்களின் நல்மனதில் தான் இருக்கிறது” என்று நெட்டிசன்கள் பலரும் இவரைப் பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
