இணையத்தில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோ, கணவன்-மனைவி உறவின் புதிய பரிமாணத்தைக் காட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக “கணவனுக்குப் பின்னால் ஒரு பெண் தூணாக நிற்கிறாள்” என்று சொல்வார்கள். ஆனால், இந்த வீடியோவில் ஒரு பெண் தன் கணவனுக்கு ஏணியாகவே மாறியுள்ளார்! வீட்டில் ஓடாத மின்விசிறியை (Fan) சரி செய்வதற்காக, ஒரு நபர் தனது மனைவியின் தோள் மீது ஏறி நின்றுகொண்டு வேலை பார்க்கிறார். இந்த வேடிக்கையான காட்சியை அந்தப் பெண்ணே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவின் பின்னணியில் “ஏணி எதற்கு, என்னை நெஞ்சோடு அணைத்துக்கொள்” என்ற வரிகள் கொண்ட இந்திப் பாடல் ஒலிக்கிறது. வீடியோவில் கணவன் தன் தோள் மீது ஏறி நின்று, பல கோணங்களில் மின்விசிறியை பழுதுபார்த்துக் கொண்டிருக்கும்போதும், அந்தப் பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் புன்னகையோடு நிற்பது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. தன் தோள் மீது கணவன் நிற்கவில்லை, ஏதோ ஒரு சிறு குழந்தை நிற்பது போன்ற லாவகத்துடன் அவர் அந்த எடையைத் தாங்கிக் கொள்கிறார். இறுதியில், மனைவியின் பலத்தால் அந்த மின்விசிறியும் வெற்றிகரமாகச் சரிசெய்யப்படுகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த தம்பதியை ட்ரோல் செய்தாலும், இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த பயனர் ஒருவர், “எனக்கும் இதேபோல ஒரு பலசாலி மனைவிதான் வேண்டும்” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவரோ, “வீட்டின் ஒட்டுமொத்த சுமையையும் பெண்ணே தாங்குகிறாள் என்பதை இன்று நிஜமாகவே பார்த்துவிட்டேன்” எனப் பாராட்டியுள்ளார்.
