சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சத்யா (33), தனது கணவர் ராஜ்குமாரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஓமலூரில் உள்ள ஒரு தனியார் கடையில் பணியாற்றி வந்தபோது, அதே கடையில் மேலாளராக இருந்த சக்திவேல் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஏற்கனவே திருமணமான சக்திவேல், சத்யாவுடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சத்யா அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், சத்யாவைச் சமாதானப்படுத்த முயன்றும் தோல்வியடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற சக்திவேல், அவர் வேறு ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாவைத் தாக்க முயன்றபோது, அவரது 10 வயது மகன் கிஷாந்த் தடுத்திருக்கிறான். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சக்திவேல், சிறுவன் கிஷாந்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்ததுடன், சத்யாவையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படுகாயமடைந்த சத்யா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதனிடையே, கொலை செய்த குற்ற உணர்ச்சியில் தலைமறைவாக இருந்த சக்திவேல், வெள்ளாளப்பட்டி அருகே மரத்தில் தனது பெல்ட் மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதல் தகராறில் ஒரு சிறுவன் உட்பட மூன்று உயிர்கள் பறிபோன இந்தச் சோகமான சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
