வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், அங்குப் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எரிசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்களை அமெரிக்கா ஏற்கனவே அழித்துவிட்டதாகக் கூறிய அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தைத் தாக்கும் வாய்ப்பு இருந்தும் பேச்சுவார்த்தைக்காக அதை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். ஈரானுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்று தயாராகி வருவதாகவும், தாங்கள் இனி அணு ஆயுதங்களை வைத்திருக்க மாட்டோம் என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள டிரம்ப், இந்தப் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், அமெரிக்காவுடன் எந்தவித நேரடிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதேசமயம், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கத் தூதரக ரீதியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் மோதல் போக்கு, உலக நாடுகளிடையே பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
