உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், பெற்ற தாயையே சுடுகாட்டில் அனாதையாக விட்டுச் சென்ற மகனின் கொடூரமான செயல் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. மதுராவைச் சேர்ந்த ரஜ்ஜோ தேவி என்ற முதியவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த அவரை, ஒரு மகன் சனிக்கிழமை இரவு ஆக்ராவிலுள்ள நியூ ஆக்ரா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஒரு சுடுகாட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவரைத் தனியாக விட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
தகவலறிந்து வந்த போலீசார், மயக்க நிலையில் இருந்த ரஜ்ஜோ தேவியை மீட்டு சிகிச்சைக்காக எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் கண்ணீருடன் பேசிய அந்தத் தாய், “பெற்று வளர்த்த இரண்டு மகன்களுமே என்னைக் கவனிக்கவில்லை; ஒருவன் என்னைத் தூரமான இடத்திற்குக் கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றுவிட்டான்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பெண் சிகிச்சையில் உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் தலைமறைவான மகனைப் பிடிப்பதற்கான விசாரணையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
