குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை மழையாகப் பொழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ‘பாகவத ஞான யாகம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆன்மீக நிகழ்ச்சியில், பாடகர் பாடத் தொடங்கியவுடன் உற்சாகமடைந்த மக்கள், பைகளில் கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளை அவர் மீது வீசத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் நோட்டுகளின் குவியலுக்கு நடுவே மூழ்கும் அளவுக்குப் பணம் குவிந்தது.
இந்தக் காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, இது ஒரு தேவையற்ற ஆடம்பரம் என்றும், பணத்தை அவமதிக்கும் செயல் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் விமர்சனம் எழுப்பினர். ஆனால், இவ்வளவு பெரிய தொகை ஒரே நேரத்தில் பாடகர் மீது வீசப்பட்ட போதிலும், அவர் சற்றும் தளராமல் தனது பாடலைத் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது. மேடையில் இருந்த தன்னார்வலர்கள் தொடர்ந்து அந்த நோட்டுகளைச் சேகரித்துக் கொண்டே இருந்தனர்.
விமர்சனங்களுக்குப் பதிலளித்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், பாடகர் மீது வீசப்பட்ட இந்தத் தொகை அவரது தனிப்பட்ட வருமானம் கிடையாது என்று விளக்கமளித்துள்ளனர். மக்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட இந்தப் பணம் முழுவதும் பசு பாதுகாப்பு (கோசேவா), மத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு மற்றும் பல்வேறு பொது நலப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். குஜராத்தின் கலாச்சாரத்தில் இது போன்ற ‘டயரோ’ நிகழ்ச்சிகளில் பணம் வீசுவது ஒரு பாரம்பரியமான முறையாகப் பார்க்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
