நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் விக்னேஷ்வரி, திருவனந்தபுரம் விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் விக்னேஷ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த அவரது மாமனார் சந்திரன், கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்துப் பார்த்துள்ளார். அங்கே விக்னேஷ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த விழிஞ்ஞம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில், கணவன்-மனைவி இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும் மாமனார் சந்திரன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். ஆனால், விக்னேஷ்வரியின் உறவினர்களும் அவரது சகோதரரும், கணவர் குடும்பத்தினரால் விக்னேஷ்வரி தொடர்ந்து பல்வேறு கொடுமைகளையும் துன்புறுத்தல்களையும் அனுபவித்து வந்ததாகக் காவல்துறையிடம் பரபரப்புப் புகாரை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர சோதனையில், விக்னேஷ்வரி தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை மீட்டெடுத்தனர். அதில், தன் கணவர் அபிலாஷ் தினமும் மதுபோதையில் தன்னை உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் விக்னேஷ்வரி உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில், மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக கணவர் அபிலாஷைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இரண்டே ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
