இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மித்ரா சைதன்யா (21) மற்றும் அவரது காதலி ஹேமலதா (20) ஆகியோர், ஒடிசா மாநிலம் பசுபுலங்காவில் 12 கிலோ கஞ்சாவை ரூ. 16,000-க்கு வாங்கியுள்ளனர். அதனை ஐதராபாத்தில் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனை செய்வதற்காக இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.
கம்மம் மாவட்டம் வைரா குறுக்கு சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இவர்கள் நிற்காமல் தப்பியோட முயன்றுள்ளனர். உடனே அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது காதலியின் பிறந்தநாளுக்காக ஐபோன் பரிசளிப்பதற்காகவே கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக சைதன்யா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்களுக்கு கஞ்சா விற்ற பகவான் ஹந்தல் மற்றும் ஐதராபாத்தில் கஞ்சாவை வாங்கவிருந்த சஷி, நாகுல் ஆகியோர் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
