“70% பேருக்கு சீட் இல்லையா?”… ராகுல் காந்தி கையில் வைத்திருந்த அந்த ரகசிய ரிப்போர்ட்… கலக்கத்தில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்…!

By Nanthini on தை 20, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் நிலவரம் குறித்து ஆலோசிக்க டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ-க்கள் பலரும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறி ராகுலை உற்சாகப்படுத்த முயன்றனர். ஆனால், ராகுல் காந்தி தனது கையில் வைத்திருந்த ரகசிய சர்வே அறிக்கையைச் சுட்டிக்காட்டி, சுமார் 70 சதவீத எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் வெற்றி பெறுவது கடினம் என்ற கள எதார்த்தத்தை முகத்தில் அடித்தாற்போல் கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

கூட்டணி விவகாரங்களைப் பொறுத்தவரை, திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் ஆட்சியில் பங்கு தொடர்பாகப் பல்வேறு சலசலப்புகள் நிலவுகின்றன. குறிப்பாக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே அடிமட்டத்தில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்பதை ராகுல் காந்தி கவனத்தில் கொண்டுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் வலுப்பெற வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் மேலிடம் உறுதியாக இருப்பதாகவும், இதன் காரணமாகவே 30 தொகுதிகள் வரை திமுகவிடம் கேட்டுப் பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

தற்போது நிலவும் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்தும் ராகுல் காந்தி தனித்தனியாகக் கருத்து கேட்டுள்ளார். தொகுதி வாரியாக எம்.எல்.ஏ-க்கள் மீதான புகார்கள் மற்றும் சவால்களைப் பட்டியலிட்டு ராகுல் காந்தி பேசியது, தமிழக நிர்வாகிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பரபரப்பான சூழலில், தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டமும் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.