ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய ராணுவத்தின் 2 பாரா சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த ‘டைசன்’ என்ற மோப்ப நாய் ஆற்றிய வீரச்செயல் நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ‘ஆபரேஷன் ட்ராஷி-I’ என்ற இந்தத் திட்டத்தின் போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திற்கு ராணுவ வீரர்களை டைசன் வழிநடத்திச் சென்றது.
அப்போது அங்கு மறைந்திருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், டைசனின் காலில் குண்டு பாய்ந்தது. இருப்பினும், காயத்தைப் பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்று பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டிய டைசனின் துணிச்சலால், முக்கிய கமாண்டர் சைஃபுல்லா உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தற்போது ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டைசன், அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. காயமடைந்த டைசனை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, ஒயிட் நைட் கார்ப்ஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே. மிஸ்ரா நேரில் சென்று அதன் உடல்நலத்தைப் பற்றி விசாரித்து பாராட்டினார்.
இந்நிலையில் கடமை தவறாத இந்த வீர நாயின் செயல், இந்திய ராணுவத்தில் மோப்ப நாய்கள் எவ்வளவு முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. நாட்டுக்காகத் துணிச்சலுடன் போரிட்ட டைசனை ஒரு சக வீரராகவே கருதி ராணுவமும் பொதுமக்களும் கௌரவித்து வருகின்றனர்.
