தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், ஆரம்பத்தில் சில நிர்வாக ரீதியான தடுமாற்றங்களைச் சந்தித்தாலும், தவறுகளைச் சுட்டிக்காட்டினால் உடனடியாகத் திருத்திக் கொள்ளும் பண்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தனது ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசு உயர் பதவி வழங்கிய நிலையில், எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த ஆணையை அவர் திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், ரத்தன் பண்டிட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து அதீதமான கணிப்புகளை முன்வைத்துள்ளார். விஜய் இன்னும் 50 ஆண்டுகளுக்குத் தமிழக முதலமைச்சராகத் தொடர்வார் என்றும், முதலமைச்சர் என்பது அவருக்கு ஒரு சாதாரண பதவிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வளர்ச்சி அடுத்ததாக டெல்லி அளவில் உயர்ந்து, பின்னர் உலகளாவிய ஒரு தலைவராக அவர் உருவெடுப்பார் என்று ரத்தன் பண்டிட் கணித்துள்ளார்.
மேலும், விஜய் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காத, தவறு செய்யாத ஒரு தலைவராகத் திகழ்வார் என்பதால், அவரால் உலக நாடுகளுக்கு இடையிலானப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று ரத்தன் பண்டிட் கூறியுள்ளார். குறிப்பாக, அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையே ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதைத் தீர்த்து வைக்கும் உலகத் தலைவராக விஜய் செயல்படுவார் என அவர் பேசியுள்ளது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் சிலர், “இப்படியெல்லாம் பேசி இருப்பதையும் கெடுத்து விடாதீர்கள்” என ஜாலியாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
