“விஜய்க்கு வக்கில்லை.. கட்சி நிர்வாகிகளுக்கும் வக்கில்லை!”… ஆதவ் அர்ஜுனாவை கிழித்து தொங்கவிட்ட சாட்டை… சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!

By Muthu Mani on பங்குனி 13, 2026

Spread the love

தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அக்கட்சியின் தேர்தல் பரப்புரைகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தவெக தலைவர் விஜய் நேரடியாகப் பங்கேற்காத போதிலும், வேட்பாளர் நேர்காணல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தவெக மாநிலத் துணைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்துள்ளார். “சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இருமொழிக் கொள்கை குறித்து விவாதிக்க உங்கள் குடும்ப தொலைக்காட்சிக்கே நான் வரத் தயார்” என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு விவாதத்தில் தான் தோற்றுவிட்டால் அரசியலை விட்டே விலகிவிடுவதாகவும் ஆவேசமாகப் பேசினார். தவெகவுக்கு கொள்கை இல்லை என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அவரது இந்தப் பேச்சு அமைந்திருந்தது.

   

ஆதவ் அர்ஜுனாவின் இந்த சவாலுக்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். “முதலில் தேர்தலில் வென்று சட்டமன்றத்திற்கு வாருங்கள், அதன் பிறகு விவாதிக்கலாம்” என அவர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் முதன்மைப் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

   

அதில், தனது கட்சியின் தலைவருக்கே பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் துணிச்சல் இல்லாத நிலையில், ஊடக விவாதங்களில் பங்கேற்கத் தெரியாத கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றவர்களை விவாதத்திற்கு அழைப்பது வேடிக்கையாக இருப்பதாகச் சாடியுள்ளார். மேலும், “உங்களை விவாதம் செய்வதற்கு உங்கள் மச்சான் அழைக்கிறார், அங்கு போய் வாருங்கள்” எனத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பதிவிட்டுள்ள அந்த வாசகங்கள், தற்போது தவெக மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்களிடையே இணையதளப் போரை மூட்டியுள்ளதோடு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.