அதிமுகவை அதிரவைத்த ராஜினாமா: எடப்பாடிக்கு எதிராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொட்டிய ரத்தக் கண்ணீர்… உடைத்த பகீர் உண்மை…!

By SATHISH R on ஆனி 30, 2026

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைமை மீது நிலவும் அதிருப்தியால் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அந்த வகையில், கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் பதவிக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் லட்சியப் பாதையில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த அத்தனை சோதனையான காலகட்டங்களிலும், நெருக்கடி நேரங்களிலும் ஒற்றைத் தலைமையாக விளங்கிய எடப்பாடி கே. பழனிசாமியின் பின்னால் தான் உறுதியாக நின்றதை இந்த அறிக்கையில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

   

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் கரூரில் தான் சந்தித்தது அரசியல் சவால்களை மட்டுமல்ல, அப்பட்டமான அதிகார அடக்குமுறைகளையும் தான் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தன் மீது 43 பொய் வழக்குகளும், தன் குடும்பத்தினர் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீது 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகளும் பாய்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தனை அராஜகங்களையும் தாங்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையையும் பண பலத்தையும் எதிர்த்துப் போராடி, கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியதாக அவர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

இத்தனை தியாகங்களுக்கும் வேதனைகளுக்கும் பரிசாக இன்று தன் நெஞ்சில் துரோக ஈட்டி பாய்ந்துள்ளதாக அவர் சாடியுள்ளார். “நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை ரணங்களை நம் உடம்பில் ஏந்தினோமோ, இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்களின் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர அதிமுக தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது” என்று திமுக-அதிமுக கூட்டணி முடிவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

மேலும் எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள அவர், “தீய சக்தி என்று அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட திமுக-வுடன், இந்த அண்ணா திமுக எப்படி கைகோர்க்க முடியும்? எடப்பாடியாரே… நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் நாங்களும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார். தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் தலைமை எடுத்த தன்னிச்சையான, சந்தர்ப்பவாத முடிவுக்கு பலியாகத் தான் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாக, “என் உடன்பிறவா கழகத் தொண்டர்களே, இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதோடு, தன் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களின் சேவகனாக தனது மக்கள் பயணம் என்றும் தொய்வின்றித் தொடரும் என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.