சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

By Devi Ramu on சித்திரை 19, 2026

Spread the love

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபே ஸ்ரீனிவாஸ் ஓஹா கடும் கவலை தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு ஆற்றில் சுமார் 11 லட்சம் லிட்டர் பால் கரைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தவிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இந்தப் பாலைக் கொடுத்திருக்கலாம் என்று வேதனைப்பட்டுள்ளார். பாலில் உள்ள வேதித்தன்மை ஆற்றின் ஆக்சிஜன் அளவைக் குறைத்து நீர்வாழ் உயிரினங்களை அழிக்கும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நமது ஆன்மீகச் செயல்பாடுகளில் அறிவியல் மனப்பான்மை இல்லை என்பதையும் சாடியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், நதிகளைப் புனிதமானது என்று கூறிக்கொண்டே அதில் கழிவுகளைக் கொட்டுவதும், சிலைகளைக் கரைப்பதும் முரண்பாடானது என்று தெரிவித்தார். சுற்றுச்சூழல் சீரழிந்தால் மனிதகுலத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து, ஒவ்வொரு குடிமகனும் இயற்கையைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக காற்று மற்றும் நீர் மாசுபாட்டால் தெருக்களில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்களும் மீனவச் சமூகமுமே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதைத் தடுக்க அரசுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.