டேராடூனில் உள்ள பித்துவாலா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு தேர்வு நடைபெற்றது. அப்போது கபீர் கந்த்வால் என்ற மாணவர் தேர்வில் முறைகேட்டில் துண்டு சீட்டு வைத்து காப்பி அடித்தல் ஈடுபட்டதாகக் கூறி ஆசிரியர்கள் அவரைப் பிடித்து கண்டித்துள்ளனர். மேலும், இது குறித்து அவரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
மறுநாள், அந்த மாணவனின் தந்தையும் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டருமான (SI) மகேஷ் கந்த்வால், சிலருடன் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அறைக்குள் அதிரடியாகப் புகுந்தார். அங்கு ஆசிரியர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, நாற்காலிகளை வீசி எறிந்ததோடு, அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் நான்கு பேராசிரியர்கள் காயமடைந்தனர். கல்லூரி அறையை அடித்து நொறுக்கிய இந்த மொத்த வன்முறைச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறை உயரதிகாரிகள் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் கந்த்வாலை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரி தரப்பு என இருதரப்பினரும் மாற்றி மாற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
