நெல்லை மாவட்டம் கொண்டாநகரத்தைச் சேர்ந்த மகாராஜனுக்கும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமராவதிக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. கங்கைகொண்டான் சிப்காட்டில் பணியாற்றி வந்த இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு மகாராஜன் தனது அத்தை மகளான அகிலாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனை முதல் மனைவி அமராவதி கடுமையாக எதிர்த்ததால் இருவருக்கும் இடையே தொடர்ந்து குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன், கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் கங்கைகொண்டான் அருகேயுள்ள பாப்பாங்குளம் கல்குவாரிக்கு அமராவதியை தந்திரமாக அழைத்துச் சென்று, அவரைப் பள்ளத்தில் தள்ளி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
நீண்ட நாட்களாக மகளைப் பார்க்க முடியாமல் தவித்த அமராவதியின் பெற்றோர், சமீபத்தில் அவரைத் தேடி வந்தபோதுதான் மகாராஜன் வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மருமகனிடம் கேட்டபோது, அமராவதி கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக அவர் பொய்யான பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அமராவதியின் தாய், சுத்தமல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். செல்போன் சிக்னல் மூலம் மகாராஜனைப் பிடித்து விசாரித்ததில், இரண்டாவது திருமணத்திற்கு இடையூறாக இருந்த முதல் மனைவியை கொலை செய்த அதிர்ச்சியூட்டும் உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், கல்குவாரியில் கிடந்த அமராவதியின் மண்டை ஓடு, எலும்புக்கூடுகள் மற்றும் சேலையை போலீசார் மீட்டுள்ளனர்.
