அதிமுக கூட்டணிக்குத் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிப்பதாக வெளியான செய்திகளுக்கு அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த விக்கிரமராஜா, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இது குறித்து விளக்கமளித்த அவர், இந்தச் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது என்றும், தேர்தல் ஆதரவு நிலைப்பாடு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகள் குறித்த கோரிக்கை பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் அவர் வழங்கினார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வணிகர்களின் கோரிக்கைகளில் சுமார் 70 சதவீதப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட விக்கிரமராஜா, மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். அரசியல் ரீதியான ஆதரவு என்பது சங்கத்தின் பொதுக்குழு முடிவைப் பொறுத்தே அமையும் என்பதால், தற்போதைய சூழலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு உறுதி செய்யப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
