குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள அகோட்டா பகுதியில், ஸ்விக்கி டெலிவரி ஊழியர் போல வேடமணிந்து முதியவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் 2026 ஜனவரி 2-ம் தேதி அரங்கேறியுள்ளது. ராதாகிருஷ்ணா சொசைட்டியில் வசிக்கும் ஹன்ஸ்முக்பாய் ஜெய்ராம் படேல் என்ற முதியவரின் வீட்டிற்கு, ஆரஞ்சு நிற ஸ்விக்கி டி-சர்ட் அணிந்து வந்த நபர், ஒரு பார்சலுக்கு கையெழுத்து இடவேண்டும் எனக் கூறி அவரை வாசலுக்கு அழைத்துள்ளார். தான் எந்தப் பொருளும் ஆர்டர் செய்யவில்லை என முதியவர் கூறியபோதும், அந்த நபர் பிடிவாதமாக பார்சலைக் கொடுக்க முயன்றுள்ளார்.
முதியவர் கையெழுத்திடுவதற்காகக் குனிந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார். முதியவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர் தலைமறைவாகிவிட்டார். இந்தச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் வதோதரா காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் டெலிவரி ஊழியர்கள் என்ற போர்வையில் நடக்கும் குற்றங்கள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
