சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு காணொளி மூலமாக, பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு, பெண் ஒருவரின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பக்கத்து வீட்டுக்காரர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தப்பியோட முயன்ற குற்றவாளியைப் பிடித்த கிராம மக்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தான் சீண்டப்பட்டதாகப் புகார் அளித்தும், அதை ஏற்றுக்கொள்ளாத பஞ்சாயத்தார்கள், அந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டி பொதுவெளியில் இருவரையும் அவமானப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
வெளியான காணொளியில், கூட்டத்தின் நடுவே காதுகளைப் பொத்தியபடி நிற்கும் அந்தப் பெண்ணை, தரையில் உள்ள எச்சிலை நக்கும்படி பஞ்சாயத்தார்கள் கட்டாயப்படுத்தும் கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, குற்றம் சாட்டப்பட்ட நபரும் தன் காதுகளைப் பிடித்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, எச்சிலை நக்க வற்புறுத்தப்பட்டுள்ளார். ஜூலை 31 அன்று இந்த விடியோ இணையத்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பிறகே, ஆகஸ்ட் 1 அன்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
எனினும், அப்பெண்ணும் அந்த நபரும் உறவில் இருந்தபோது சிக்கியதால் பஞ்சாயத்து கூட்டியதாக கிராம மக்கள் வேறுவிதமான விளக்கத்தை அளித்து வருகின்றனர். எது எப்படியிருப்பினும், குற்றச்சம்பவங்களை விசாரிக்க வேண்டியது காவல்துறையே தவிர கிராம மக்கள் அல்ல என்றும், பஞ்சாயத்து என்ற பெயரில் பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை முற்றிலும் மனிதாபிமானமற்றது என்றும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
