தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி, ஸ்டுடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த கேமராவை அசல் கிராமத்து மண்ணுக்கும் எதார்த்த மனிதர்களுக்கும் நேராகத் திருப்பியவர் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா. தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த இவர், திரையுலகின் மீது கொண்ட தீரா மோகத்தால் தனது அரசு வேலையைத் துறந்து சென்னைக்கு வந்து உதவி இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். 1977 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ’16 வயதினிலே’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்து மண் வாசனைப் படங்களுக்கான புதிய பாதையை வகுத்தது.
இளையராஜாவுடன் இணைந்த அழியாத இசைக் கூட்டணி, புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் அசாத்தியத் திறன் மற்றும் “என் இனிய தமிழ் மக்களே” என்ற காந்தக் குரல் அறிவிப்பு ஆகியவை இவரது தனித்துவ முத்திரைகளாக மாறின. இன்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். பாரதிராஜா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் உள்ளிட்ட பலரும் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கோலோச்சிய பாரதிராஜா, நிஜ வாழ்க்கையில் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது குறித்து கடந்த 2022ஆம் ஆண்டு அவர் அளித்த பேட்டி ஒன்று மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் மிகச்சிறந்த அரசியல்வாதியாக நடித்திருந்தாலும், நிஜத்தில் ஏன் தடம் பதிக்கவில்லை என்பதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். நடிகை ரோஜாவுக்குத் தமிழகத் திரையுலகினர் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவின் போது பேசிய அவர், தான் ஒரு “உளறுவாயன்” என்பதால் தான் அரசியலுக்குச் செல்லவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பேட்டியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், கலைஞர் மு.க.கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட பல முன்னணி தலைவர்களே தன்னை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகப் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். ஆனால், “நான் செத்தாலும் ஒரு திரைக் கலைஞனாக மட்டுமே சாக வேண்டும் என்பதே எனது இறுதி விருப்பம்” என்று அப்போதே ஜெயலலிதா அவர்களிடம் தான் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகப் பாரதிராஜா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
