நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகன் தனுஷின் சிகிச்சை மற்றும் எதிர்காலத்திற்காகக் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறித் தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் ஜப்பானில் தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதியின் திருமணம் திரையுலகப் பிரபலங்கள் சூழ விமரிசையாக நடந்து முடிந்தது. தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தனுஷ், தன்னுள் மறைந்திருந்த சினிமா மீதான ஆர்வத்தை வெளிப்படுத்திய சுவாரஸ்யமான நிகழ்வு அண்மையில் தெரியவந்துள்ளது.
நடன இயக்குநர் கலா மாஸ்டருக்கு அளித்த பேட்டியில், தனுஷின் திரை அறிமுகம் குறித்து நெப்போலியன் பகிர்ந்துள்ளார். தான் நடித்துக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய ஒரு வாரமே இருந்த சூழலில், தனுஷுக்கு நடிக்க ஆசை இருப்பதை அவரது மனைவி அக்ஷயா மூலமாக நெப்போலியனின் மனைவி சுதா அறிந்துகொண்டு அவரிடம் தெரிவித்துள்ளார். முன்பே சொல்லியிருந்தால் படம் முழுக்க ஒரு நல்ல கதாபாத்திரத்தையே அமைத்துக் கொடுத்திருக்கலாமே என்று நெப்போலியன் எண்ணியுள்ளார்.
பின்னர் நெப்போலியன் தன் மகனிடம் நேரடியாக இதுபற்றிக் கேட்டபோது, தனுஷ் இயல்பான தயக்கத்துடன் ‘சும்மா ஆசைக்குச் சொன்னேன்’ என்று கூறியுள்ளார். மகனின் உள்ளத்து விருப்பத்தைப் புரிந்துகொண்ட நெப்போலியன், படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் கூட ஒரு காட்சியிலாவது மகனைத் திரையில் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்து, அந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்து அவரது நீண்ட நாள் கனவை நிறைவேற்றி வைத்துள்ளார்.
