தாலியின் ஈரம் கூட காயல..! “நடத்தையில் சந்தேகம்” திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை…!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love

கர்நாடக மாநிலம், நெலமங்கலா தாலுகா, பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட மல்லச்சந்திரா பகுதியைச் சேர்ந்தவர் லிகித் சிம்ஹா. இவருக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா தனது கணவருடன் மல்லச்சந்திராவில் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலின் போது, ஐஸ்வர்யாவின் பெற்றோர் அங்கு வந்து மருமகனிடம் சமரசம் பேசிச் சண்டையை முடித்து வைத்துள்ளனர். அவர்கள் மாலையில் வீடு திரும்பிய பிறகு, மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா, கணவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தனது புடவையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

   

பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த லிகித் சிம்ஹா, மனைவி தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் லிகித் சிம்ஹாவைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.