மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமனை ஆதரித்து அச்சரப்பாக்கத்தில் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல் எதிரிகள் மீதும் அரசின் திட்டங்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை முறையே மனிதகுல மற்றும் தமிழினத்தின் எதிரிகள் என்று வர்ணித்த அவர், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக உலாவும் செய்திகளையும் மறுத்துப் பேசினார். மேலும், இலவச பேருந்துப் பயணம், இலவச எரிவாயு உருளை போன்ற திட்டங்கள் இல்லாத காலத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கை நடந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் என்ற தேர்தல் வாக்குறுதி தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே என சுருக்கப்பட்டதையும் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை எக்காரணம் கொண்டும் கட்ட விடமாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில் எட்டு வழிச்சாலை மற்றும் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டங்களை தாம் தடுத்து நிறுத்தியதை நினைவுகூர்ந்த சீமான், மக்களின் நலனைக் காக்க ஒரு அய்யனாரைப் போலத் தொடர்ந்து காவல் நிற்பேன் என உறுதியளித்தார். தான் சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைக்கும் வரை மட்டுமே ஆளுங்கட்சியினர் நிம்மதியாக இருக்க முடியும் என்றும் அவர் அதிரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
