மதுரை தெற்குவாசல் காவல் நிலையம் தனியார் கொடையாளர்களின் உதவியுடன் மிகப்பிரம்மாண்டமாகப் புதுப்பிக்கப்பட்டு, தற்போது பார்ப்பதற்கே ரம்மியமாகத் தோற்றமளிக்கிறது. முன்னதாகப் பாழடைந்த நிலையில் இருந்த இந்தக் கட்டிடம், தற்போது வண்ணமயமான ஓவியங்கள் மற்றும் அழகிய பூந்தொட்டிகளுடன் ஒரு கார்ப்பரேட் அலுவலகம் போலக் காட்சியளிக்கிறது.
புகார் அளிக்க வருபவர்கள் மற்றும் விசாரணைக்காக வருபவர்கள் வசதியாக அமருவதற்கு நவீன குஷன் நாற்காலிகள் மற்றும் மனதை அமைதிப்படுத்தும் விதமான திரைச்சிலைகள் எனப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், காவலர்களின் உடல்நலனை மேம்படுத்த நவீன உடற்பயிற்சி கூடமும், அறிவை வளர்க்கும் விதமாக ஒரு நூலகமும் இந்த காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, காவல் நிலையத்திற்கு வரும் குழந்தைகளுக்காகத் தனி விளையாட்டு அறை மற்றும் கண்ணைக் கவரும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஒரு இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நவீன முன்னெடுப்பு, தற்போது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
