திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அருணா, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக விஏஓ சிவபாரதியைக் காதலித்ததால், அவரது குடும்பத்தினரே அவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது வருமானத்தில் குடும்பத்திற்காகக் கடன் வாங்கி வீடு கட்டிக் கொடுத்த நிலையிலும், சாதியைக் காரணம் காட்டி அருணாவை அவரது சகோதரர்கள் கடுமையாகத் தாக்கியதாகவும், கட்டாயப்படுத்தி வாயில் விஷத்தை ஊற்றியதாகவும் காதலர் சிவபாரதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக அருணா தனது காதலனுடன் பேசிய உருக்கமான ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தன்னைத் தேடி வந்து வெட்டுவதாக மிரட்டுவதாகவும், தான் இல்லையென்றால் காதலனின் நிலை என்னவாகும் என அஞ்சுவதாகவும் அவர் கதறியுள்ளார்.
மேலும், தனக்கு வீட்டில் விஷம் கொடுத்துவிட்டதாக அவர் அனுப்பிய குறுஞ்செய்தியும் தற்போது ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அருணாவின் அண்ணன் காவலராக இருப்பதால் வழக்குப்பதிவு செய்யத் தாமதமாவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
