தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆளும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அ.தி.மு.க.வில் வெடித்த உட்கட்சி மோதல் தற்போது மீண்டும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது. த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி வேலுமணி அணியினரின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்ததுடன், இரு தரப்பும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் பரஸ்பரம் புகார்களை அளித்தனர். இந்த அரசியல் இழுபறிக்கு மத்தியில், தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க வேலுமணி தரப்பில் எஞ்சியிருந்த 16 எம்.எல்.ஏ.க்களும் இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இ.பி.எஸ். இல்லத்திற்கு நேரில் சென்று மீண்டும் இணக்கப் பாதைக்குத் திரும்பியுள்ளனர்.
தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனையைத் தொடர்ந்து, அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சபாநாயகரிடம் இரு அணிகளும் முன்பு அளித்திருந்த புகார்களை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உடனடியாகச் சட்டமன்ற வளாகத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தான் அளித்திருந்த மனுக்களை முறைப்படி வாபஸ் பெற்றார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை அ.தி.மு.க.வில் மீண்டும் ஓங்கியுள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது.
இருப்பினும், இன்று காலை வரை சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் தான் வேலுமணி தரப்பின் ஆலோசனைகள் நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியுடனான இறுதிச் சந்திப்பில் சி.வி. சண்முகம் மட்டும் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தியின் பின்னணியில், சி.வி. சண்முகம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஏற்கனவே சென்ற 4 எம்.எல்.ஏ.க்களைப் போலத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற தகவல் வேகமாகப் பரவி வருகிறது. த.வெ.க. தரப்பிலிருந்தோ அல்லது சி.வி. சண்முகத்திடமிருந்தோ இதற்கு இதுவரை அதிகாரப்பூர்வ மறுப்போ அல்லது அறிவிப்போ வெளியாகாத நிலையில், அ.தி.மு.க.வின் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் இவரைப் பின்பற்றக் கூடும் என்ற அச்சமும் அக்கட்சியினரிடையே நிலவுகிறது.
