வீட்டில் நுளம்புச் சுருள்கள் மற்றும் ரசாயன கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது உடனடி தீர்வைத் தந்தாலும், அவற்றிலிருந்து வரும் நச்சுப் புகை நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு இதனால் பக்கவிளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கை வழிகளைப் பின்பற்றி நுளம்புகளை விரட்டுவது தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நம் வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் வேப்ப எண்ணெய், லெமன் கிராஸ் எண்ணெய் யூக்கலிப்டஸ் எண்ணெய் மற்றும் கற்பூரம் போன்றவை சிறந்த இயற்கை கொசு விரட்டிகளாகச் செயல்படுகின்றன. வேப்ப எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தைச் சேர்த்து தீபம் ஏற்றுவது அல்லது லெமன் கிராஸ் எண்ணெயைத் தண்ணீரில் கலந்து தெளிப்பது வீட்டைச் சுற்றி நுளம்புகள் வராமல் தடுக்கும். மேலும், கிராம்பு சொருகிய எலுமிச்சை பழத்தை அறைகளில் வைப்பதும் கொசுக்களை இயற்கையாகவே விரட்ட உதவும்.
இவற்றுடன் வீட்டைச் சுற்றிலும், வீட்டின் உள்ளேயும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது டெங்கு மற்றும் மலேரியா பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் முக்கிய வழியாகும். மாலை நேரங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைப்பதோடு, துளசி, புதினா போன்ற கொசுக்களை விரட்டும் தாவரங்களை வீட்டின் நந்தவனத்திலோ அல்லது பால்கனியிலோ வளர்ப்பதன் மூலம் ரசாயனங்கள் அற்ற ஆரோக்கியமான முறையில் நுளம்புத் தொல்லையிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
