தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி விவகாரங்களில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சாய்ந்தது திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டங்களை திமுக தொடர்ந்து புறக்கணித்து வந்தது. இந்த அசாதாரண சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வரவிருக்கும் முக்கிய மசோதாக்களுக்கு திமுக ஆதரவளிக்கக்கூடும் என்ற புதிய அரசியல் விவாதமும், யூகங்களும் வேகமாக பரவி பரபரப்பைக் கிளப்பின.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தொகுதி மறுவரை தொடர்பான 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற பெயரில் கொண்டு வரப்படும் இந்த மசோதாவில் தொகுதி மறுவரையே பிரதானமாக இருப்பதால், இதன் மீது திமுகவின் ஆதரவைப் பெற பாஜக முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், எம்பிக்களுடன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்புவார்கள் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு புதிய சட்டமாக இருந்தாலும், மாநில உரிமைகளையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கும் வகையிலேயே திமுகவின் நிலைப்பாடு இருக்கும் என்றும், தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் செயல்படுவார்கள் என்றும் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
