முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒருமையில் பேசி, வன்முறையைத் தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்த விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மார்க்கண்டேயன், “சட்டமன்றத்தைக் கூட்டியவுடன் உனக்கு எலும்பு இருக்காது, எலும்பை உடைத்துவிட்டுத்தான் அனுப்பிவைப்போம்” என முதலமைச்சரை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த அவதூறு மற்றும் மிரட்டல் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்கண்டேயனின் இந்த வன்முறைப் பேச்சுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான பதிலடியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். தமிழக முதலமைச்சரின் எலும்புகளை உடைப்பேன் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பது அப்பட்டமான வன்முறைத் தூண்டல் என்று சாடியுள்ள அவர், ஏற்கனவே முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முதலமைச்சர் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். மார்க்கண்டேயன் மட்டுமல்லாது, திமுகவைச் சேர்ந்த பலரும் முதலமைச்சர் மீது தொடர்ந்து மிக மோசமான முறையில் தாக்குதல் தொடுத்து வருவதாக அமைச்சர் வன்னி அரசு தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
