திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் மங்கையற்கரசி (36). இவருக்கும் ஆனந்த கருப்பையா என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மங்கையற்கரசி சிவகாசியில் பட்டாசு ஆலையில் பணியாற்றியபோது, தங்க மாரியப்பன் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த உறவு குறித்து அறிந்த கணவர், மனைவியைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் சிவகாசியிலேயே தங்கிவிட்டார். இதனால், மங்கையற்கரசி தனது ஒரு மகன் மற்றும் தாயுடன் திருநின்றவூரில் குடியேறி, அம்பத்தூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு தங்க மாரியப்பனும் அவருடன் ஒரே வீட்டில் ‘லிவிங் டு கெதர்’ முறையில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மங்கையற்கரசி தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாகப் பேசி வந்ததாகத் தெரிகிறது. வீட்டிற்கு வந்த பிறகும் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை தங்க மாரியப்பன் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மங்கையற்கரசியை அழைத்துச் செல்லச் சென்றபோது, அவர் சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்த தங்க மாரியப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மங்கையற்கரசி, தன்னை கட்டுப்படுத்த வேண்டாம் என்றும், பிடிக்கவில்லை என்றால் ஊருக்குச் சென்று மனைவியுடன் வாழுமாறும் கூறியது மாரியப்பனை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
தன்னுடைய உழைப்பையும் வருமானத்தையும் மங்கையற்கரசிக்காகச் செலவிட்டும், அவர் தன்னை அவமதிப்பதாக நினைத்த தங்க மாரியப்பன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். நேற்று மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மங்கையற்கரசியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மாரியப்பன், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து மங்கையற்கரசியின் கழுத்தை அறுத்துள்ளார். இதைப் பார்த்து தடுக்க வந்த மங்கையற்கரசியின் தாய் மீனாட்சியையும் அவர் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இருவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக திருநின்றவூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மங்கையற்கரசி மற்றும் அவரது தாயை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்க மாரியப்பனைப் போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
