நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பட் சீட்டுகளை மீண்டும் சரிபார்க்கக் கோரித் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் 5 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க தாம் அளித்த விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் தாமதமாக நடவடிக்கை எடுத்ததால், 100 சதவீத வி.வி.பட் சீட்டுகளையும் சரிபார்க்க உத்தரவிடக் கோரி மு.க.ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கில் தேர்தல் ஆணையத் தரப்பில், தேர்தல் முடிவை எதிர்த்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையான ‘தேர்தல் மனு’ மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும், ரிட் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்றம், ரிட் மனு அடிப்படையில் வாக்கு இயந்திரங்களைச் சரிபார்க்க உத்தரவிட முடியாது எனக் கூறி, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தள்ளுபடி செய்தது.
