உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், தனது கள்ளக்காதலியைக் கொலை செய்து உடலை இரும்புப் பெட்டியில் வைத்து எரித்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியைச் சேர்ந்த ராம் சிங் (62) என்ற அந்த நபர், ஏற்கனவே திருமணமான பிரீத்தி (32) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்களுக்குள் பண விவகாரம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம் சிங், பிரீத்தியை அடித்துக் கொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய இரும்புப் பெட்டிக்குள் வைத்துத் தீயிட்டு எரித்துள்ளார்.
இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு, எரிக்கப்பட்ட உடல் பாகங்கள் அடங்கிய பெட்டியை அப்புறப்படுத்த ராம் சிங் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆட்டோவில் கொண்டு செல்லும் வழியில் பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும், ராம் சிங்கின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததாலும் ஆட்டோ டிரைவர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் வருவதைக் கண்ட ராம் சிங் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் சாம்பலும் சில எலும்புகளும் மட்டுமே இருந்தன. தலைமறைவாக உள்ள ராம் சிங்கையும், இதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் அவரது மகனையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
