கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் அச்சமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ், அசோக்குமார், திவாகர் மற்றும் இரு திருப்பதி ஆகிய ஐந்து நண்பர்கள் கிருஷ்ணகிரி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் அரசு பொறியியல் கல்லூரி மேம்பாலத்தைக் கடக்கும்போது, எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று இவர்களது காரின் மீது பலமாக மோதியது. இதன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மையத் தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அன்பழகனின் மகனான திருப்பதி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அசோக்குமாரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். படுகாயமடைந்த மற்ற மூவருக்கும் தொடர்ந்து மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த கந்திகுப்பம் காவல்துறையினர், பலியான இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்கான காரணங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
