வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், வாடகை பாக்கியைக் கேட்ட கட்டிட உரிமையாளரை வாடகைதாரரே சிறைபிடித்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓய்வு பெற்ற செவிலியரான 75 வயது சந்திரா என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில், வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக அலுவலகம் நடத்தி வருகிறார்.
நீண்ட நாட்களாக வாடகை தராததால் கட்டிடத்தை காலி செய்யுமாறு சந்திரா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பேசச் சென்ற சந்திராவையும் அவரது மகனையும், வழக்கறிஞர் ராமச்சந்திரன் அறையிலேயே வைத்துப் பூட்டிவிட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பூட்டிய அறைக்குள் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சந்திரா மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் அலுவலகக் கதவை உடைத்து அவர்களை மீட்டனர். தற்போது சந்திரா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தை மதிக்க வேண்டிய வழக்கறிஞரே, மூதாட்டி என்றும் பாராமல் வீட்டு உரிமையாளரைச் சிறைபிடித்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துக் குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
