கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் ஆதித்தபுரத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், மின் இணைப்பு வழங்க தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக தோவாளை மின்சார வாரிய இளநிலை பொறியாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டியுள்ள அவர், தனது வீட்டிற்கு மின் இணைப்பு கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகியபோது, அவர் உல்லாசத்திற்கு அழைத்ததாக அப்பெண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மின் இணைப்பு தொடர்பாக நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டபோது அந்த அதிகாரி இத்தகைய அநாகரீகமான கோரிக்கையை முன்வைத்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ஏற்கனவே உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தற்போது மாவட்ட ஆட்சியரிடம் நீதி கேட்டு மனு அளித்துள்ளார். இச்சம்பவம் மின்சார வாரிய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
