பசி என்று காத்திருப்பவர்களுக்குத் தாரக மந்திரமாக விளங்குபவர்கள் உணவு விநியோக ஊழியர்கள். வெயில், மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாமல், அடுத்தவர் பசி போக்க ஓயாது உழைக்கும் ஒரு சாதாரண மனிதனை, வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, அவரிடமிருந்த உணவைப் பிடுங்கிக்கொண்டு, அவரை அவமானப்படுத்தித் தெருவில் தள்ளியச் செயல் வெறும் குற்றமல்ல அது மனிதாபிமானத்தின் மீதான ஒரு கொடூரத் தாக்குதல்.
மேலும் உழைப்பால் உயர்ந்து தன் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஒரு ஏழையின் கண்ணீரில் எக்காலத்திலும் எவரும் இன்பம் காண முடியாது. இன்று ஒரு விநியோக ஊழியருக்கு நேர்ந்த இந்த அவலநிலை, நாளை நமக்கோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மனிதாபிமானம் செத்துப்போன இதுபோன்ற செயல்கள் சமூகத்தின் மாபெரும் வீழ்ச்சியையே காட்டுகின்றன.
இதனால் எளியவர்களின் இயலாமையைப் பார்த்து எள்ளிநகையாடுவது ஒருபோதும் வீரமாகாது. ஒருவேளை உணவிற்காகக் கடுமையாக உழைக்கும் ஒருவரை வஞ்சித்தவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுவொரு பாடமாக அமைய வேண்டும்.
இந்நிலையில் நாம் ஒவ்வொருவரும் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வறுமையும் இயலாமையும் கேலிக்குரியவை அல்ல; அவை மதிக்கப்பட வேண்டிய போராட்டங்கள். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் மற்றவரை ஒரு சக மனிதனாக மதிக்கும் பண்பைப் வளர்த்துக்கொள்ளாதவரை, இது போன்ற அநீதிகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். பிறரின் கண்ணீரைத் துடைக்கவில்லை என்றாலும், அதற்குக் காரணமாக நாம் இருந்துவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
