சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம்.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நேரிட்ட பயங்கர விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான குப்பன் என்பவரின் மனைவி லட்சுமி, நேற்று காலை வழக்கம் போல் துணிகளை காயப்போடுவதற்காக பால்கனிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் அங்கு நின்றிருந்த போது, எதிர்பாராதவிதமாக பால்கனி தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய லட்சுமி, சுவருடன் சேர்த்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லட்சுமி, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்த குடியிருப்பில் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதால், முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், அங்கு புதிதாகக் கட்டப்பட்ட பால்கனி தடுப்புச் சுவரே இடிந்து விழுந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் மீதான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தரமற்ற கட்டுமானப் பணியும், போதிய பாதுகாப்பு குறைபாடுமே இந்த விபத்துக்கு முதன்மைக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் இந்த கோர விபத்து குறித்து கண்ணீர் மல்கப் பேசுகையில், “அவர் துணிகளை காயப்போட்டுவிட்டு, ஒரு குச்சியால் அதை தள்ளிவிட்டுள்ளார். அவ்வளவுதான், அடுத்த நொடியே பலத்த சத்தம் கேட்டு எல்லாரும் ஓடிவந்து பார்த்தால் லட்சுமி கீழே விழுந்து கிடந்துள்ளார். எங்களுடைய குடும்பம் இப்படி சிதைந்துபோனது போல, இனி வேறு எந்தக் குடும்பமும் அழியக் கூடாது. கட்டுமானப் பணியின் போது சிமெண்ட் சரியாகப் போடவில்லை, கலவையும் சரியாக மிக்ஸ் செய்யப்படவில்லை. வெறும் மணலை மட்டும் வைத்துவிட்டு அதன் மேல் செங்கற்களை அடுக்கினால் சுவர் எப்படி ஸ்ட்ராங்காக நிற்கும்?” என்று அழுதுகொண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புதிதாகக் கட்டப்பட்ட சுவர் இவ்வளவு எளிதாக இடிந்து விழுந்தது எப்படி, கட்டுமானப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசு குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அனைத்துக் கட்டடங்களையும் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
