உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகர் அருகே உள்ள கலந்தர்கர்கி கிராமத்தில், குடும்பப் பகை மற்றும் சந்தேகத்தின் காரணமாகத் தந்தை மற்றும் மனைவியை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அலிகரில் மருந்துக் கடை நடத்தி வரும் மோமின் கான் என்ற வாலிபர், சொத்து வியாபாரியான தனது தந்தை முகமது ரியாசுதீன் (50) மற்றும் மனைவி சனா (24) ஆகிய இருவரையும் தந்தையின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி ஓடினார். இதில் ரியாசுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொடூரமான பின்னணி வெளிவந்துள்ளது. மோமின் கான் – சனா ஜோடிக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகி, இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக மோமின் நீண்ட நாட்களாகச் சந்தேகப்பட்டு வந்துள்ளார். மேலும், அந்தப் புதுப்பிறந்த குழந்தையின் தந்தை யார் என்ற சந்தேகமும் அவருக்குள் வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டு, சனாவின் குடும்பத்தினர் சமரசம் பேச வந்து சென்றுள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே மோமின் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மோமின் கான் மீது பிஎன்எஸ் (BNS) சட்டத்தின் 103-வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தை அளித்த மோமின், “தனது தந்தையும் மனைவியும் தவறான உறவில் இருந்ததை எட்டு மாதங்களுக்கு முன்பே ஒருமுறை பார்க்கக்கூடாத கோலத்தில் கையும் களவுமாகப் பிடித்தேன். பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. மேலும், மனைவியின் மொபைல் போனில் தந்தை மற்றும் மனைவியின் ஆபாச உரையாடல்களையும், புகைப்படங்களையும் கண்டெடுத்தேன்” என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
