‘கடைக்குட்டி சிங்கம்’, ‘டாக்டர்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற துணை நடிகை தீபாவின் தந்தை புலவர் கணேசன் (70). தூத்துக்குடி மாநகர் 57-வது வார்டு காங்கிரஸ் தலைவராகவும், முத்தையாபுரம் பத்ரகாளி அம்மன் கோயில் தர்மகர்த்தாவாகவும் இருக்கும் இவர், நேற்று முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், முன்விரோதம் காரணமாக புலவர் கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனைத் தடுக்க முயன்ற அருகிலிருந்த மற்றொரு நபருக்கும் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.
புலவர் கணேசன் பத்ரகாளி அம்மன் கோயில் அருகே காமராஜர் சிலை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். கோயில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைக்கும் விவகாரத்தில், அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறின் உச்சக்கட்டமாகவே நேற்று அவர் மீது இந்த பயங்கர கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது காயமடைந்த புலவர் கணேசன் மற்றும் தடுக்க முயன்ற நபர் ஆகிய இருவருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், முத்தையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்த பொன்ராஜ் (25), இசக்கி (22) மற்றும் கார்த்தி ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
