திருமண பந்தம் என்பது இரு மனங்கள் இணையும் புனிதமான நிகழ்வாகக் கருதப்பட்டாலும், சில நேரங்களில் அது ரத்தக் கறையோடும், ஆறாத வடுக்களோடும் முடிவது சமூகத்தின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆந்திர மாநிலம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்துள்ள இரு வேறு அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், ‘கௌரவம்’ என்ற பெயரில் மனிதநேயம் எப்படிக் கொல்லப்படுகிறது என்பதையும், எதிர்பாராத திருப்பங்கள் ஒருவரது வாழ்வையே எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதையும் உணர்த்துகின்றன.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. மண்டபேட்டா பகுதியைச் சேர்ந்த 41 வயதான சூர்யபிரகாஷ், துணை வட்டாட்சியராகப் பணியாற்றும் சந்தியா என்பவரைக் காதலித்து, அன்னவரம் கோயிலில் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களின் காதலுக்குச் சந்தியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திருமணப் புகைப்படங்களைக் கண்டு ஆத்திரமடைந்த சந்தியாவின் சகோதரர்கள், ஆத்திரம் தாங்காமல் சூர்யபிரகாஷின் வீட்டிற்கே சென்று அவரைப் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் சூர்யபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது ஒரு ‘கௌரவக் கொலை’ என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தியாவின் சகோதரர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு பெண்ணின் விருப்பத்தையும், ஒரு மனிதனின் உயிரையும் விடச் சாதி மற்றும் குடும்பக் கௌரவம் மேலானது என நினைக்கும் இத்தகைய பிற்போக்குத்தனமான சிந்தனைகள், இன்றும் அரசு அதிகாரிகளாகப் பணியாற்றுபவர்களின் குடும்பங்களிலேயே நீடிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம், உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்துள்ள சம்பவம் விசித்திரமான மற்றும் அதே சமயம் மிகுந்த ஏமாற்றத்தைத் தரக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. பெரும் கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் முதலிரவு அறைக்குள் நுழைந்த மணமகனுக்கு, அங்கு மணப்பெண் அளித்த அதிர்ச்சித் தகவல் பேரடியாகத் தக்கியுள்ளது. திருமணமான சில மணிநேரங்களிலேயே அந்தப் பந்தம் முறிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள், திருமணத்திற்கு முன்பே இரு வீட்டாருக்கும் இடையே இருக்க வேண்டிய வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
