மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்திலுள்ள பகதர்புரா கிராமத்தில், திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கும் ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் மணமகன் வீட்டார் வழங்கிய அசாத்தியமான ‘ரிட்டர்ன் கிப்ட்’ நாடு முழுவதும் பெரும் ஆச்சரியத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கடந்த மே 20 அன்று நடைபெற்ற சித்தேஸ்வர் பெத்கர் என்ற வாலிபரின் திருமணத்தில், வழக்கமாகத் தரப்படும் இனிப்பு அல்லது ஆடைகளுக்குப் பதிலாக, கிராம மக்கள் அனைவருக்கும் பயனுள்ள ஒரு பரிசை வழங்க மணமகன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 3,465 குடிமக்கள் அனைவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ‘கூட்டு விபத்துக் காப்பீடு’ திட்டத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர். இந்த ஒட்டுமொத்த காப்பீட்டின் மொத்த மதிப்பு சுமார் 33 கோடியே 60 லட்சம் ரூபாய் ஆகும். இதற்கான பிரீமியம் தொகையை மணமகன் குடும்பத்தினரே முழுமையாகச் செலுத்தியுள்ளனர். இதன் மூலம் கிராம மக்கள் அனைவரும் ஓராண்டு காலத்திற்குப் பெரிய விபத்துகளில் இருந்து நிதியியல் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் விவசாயம் செய்யும்போது ஏற்படும் விபத்துகள், மின்னல் தாக்குதல் மற்றும் பாம்பு கடி போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்களால் ஏழைக் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக மணமகனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்காகக் கிராம ஊராட்சியின் உதவியுடன் வாக்காளர் பட்டியலைப் பெற்று, எவ்வித பாகுபாடுமின்றி தகுதியுடைய அனைத்து கிராம மக்களுக்கும் இந்த காப்பீட்டுப் பாலிசி நேரடியாகச் சென்றடையும் வண்ணம் செய்துள்ளனர். ஆடம்பரமாகச் செலவு செய்யாமல் சமூகப் பொறுப்புடன் செய்யப்பட்ட இந்த உன்னத செயல் ஒட்டுமொத்த கிராமத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
