பெகுசராய் பகுதியில் கோச்சிங் கிளாஸ் சென்று வந்த 19 வயது வாலிபர் விஷால், அங்கு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் அந்தப் பெண்ணின் சகோதரருக்கு தெரியவர, அவர் விஷாலை எச்சரித்து காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். தொடக்கத்தில் விஷால் இதற்கு சம்மதித்தது போல நடித்தாலும், காதலி அழைக்கும் போதெல்லாம் ரகசியமாக அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் தூங்கிய பிறகு, அந்தப் பெண் விஷாலை தொலைபேசியில் அழைத்து தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பார். இந்த ரகசிய சந்திப்புகள் குறித்து மீண்டும் பெண்ணின் சகோதரருக்கு சந்தேகம் வரவே, அவர் ஒரு திட்டத்தைத் தீட்டினார். அதன்படி, அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி விஷாலை அடுத்த நாள் வீட்டிற்கு வரவழைக்கச் செய்துள்ளார். தனது காதலியின் அழைப்பை உண்மையானது என்று நம்பிய விஷால், அவரைச் சந்திக்கும் ஆவலில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீட்டின் கதவைத் திறந்தபோது காதலிக்கு பதிலாக அவரது குடும்பத்தினர் நின்றிருப்பதைப் பார்த்து விஷால் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தார். தான் செய்த தவறுக்காக அவர் பலமுறை மன்னிப்புக் கேட்டும், ஆத்திரத்தில் இருந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. ஒருகட்டத்தில் ஆத்திரம் எல்லை மீறவே, அவர்கள் விஷாலை செங்கற்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 19 வயது வாலிபர் விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
